ஊட்டி நகரில் உலா வந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு


ஊட்டி நகரில் உலா வந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2018 10:30 PM GMT (Updated: 4 Sep 2018 8:00 PM GMT)

ஊட்டி நகரில் உலா வந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் காபிஹவுஸ் ரவுண்டானாவை ஒட்டி பழைய அக்ரஹாரம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காட்டெருமை உலா வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பகல் நேரத்தில் முக்கிய சாலையான கமர்சியல் சாலையில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இருந்ததால் காட்டெருமையை விரட்ட முடியவில்லை.

இதற்கிடையே காட்டெருமை உலா வரும் பகுதியின் இருபுறங்களிலும் வனத்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊட்டி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து குறைந்தவுடன் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர். இரவு 9 மணியளவில் அங்குள்ள புல்வெளியில் காட்டெருமை படுத்து ஓய்வு எடுத்து கொண்டு இருந்தது.

இரவு 10 மணிக்கு மேல் வனத்துறையினர் கமர்சியல் சாலையில் இருந்து சேரிங்கிராஸ் வரை வாகனத்தில் சென்று ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதில் கமர்சியல் சாலை வழியாக காட்டெருமை விரட்டப்பட உள்ளதால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் வெளியே வர வேண்டாம், வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்ல வேண்டும், காட்டெருமை வரும்போது யாரும் செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் 10.30 மணிக்கு பழைய அக்ரஹாரம் பகுதியில் இருந்து காட்டெருமையை விரட்டும் பணி தொடங்கியது. இந்த பணியில் உதவி வன பாதுகாவலர் சரவணன், வனச்சரகர் முத்துகிருஷ்ணன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பழைய அக்ரஹாரம் பகுதியில் இருந்து கமர்சியல் சாலைக்கு வந்த காட்டெருமை வழிதவறி செல்லாமல் இருக்க தடுப்புகள் போடப்பட்டு இருந்தது. அப்போது அதிகமாக கூச்சலிட்டதால் முன்னோக்கி சென்ற காட்டெருமை திடீரென பின்னோக்கி திரும்பி வனத்துறையினரை நோக்கி வந்தது. உடனே வனத்துறையினர் ஓட்டம் பிடித்தனர். பின்னர் பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த காட்டெருமையை மீண்டும் கமர்சியல் சாலைக்கு விரட்டினர். தொடர்ந்து கேஷினோ சந்திப்பில் இருந்து வால்சம்பர் சாலை, ரோஜா பூங்கா சந்திப்பு பகுதிக்கு காட்டெருமை சென்றது. வனத்துறையினர் வாகனங்களில் சென்று சாலையின் குறுக்கே இடைவெளியில் உள்ள வழிகளை மறித்து காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சேரிங்கிராஸ் சந்திப்பு, ஊட்டி–கோத்தகிரி சாலை வழியாக காட்டெருமை நடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ஒரு தனியார் விடுதிக்குள் நுழைந்தது. உடனே வனத்துறையினர் கூச்சலிட்டதை தொடர்ந்து, வெளியே வந்தது. அதன்பின்னர் ஊட்டி அரசு கலைக்கல்லூரி சாலையில் காட்டெருமை சுற்றித்திரிந்தது. பிறகு வனத்துறையினரின் தீவிர முயற்சியால் மதுவானா வழியாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு காட்டெருமை விரட்டியடிக்கப்பட்டது. அங்கு சென்றதும் தண்ணீர் குடித்து காட்டெருமை தனது தாகத்தை தீர்த்து கொண்டது. இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 2 மணி நேரம் வனத்துறையினர் போராடி காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவில் காட்டெருமையை விரட்டுவதை பார்க்க திரண்ட மக்கள் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர்.


Next Story