சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் டிரைவர் காயம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் டிரைவர் காயம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sep 2018 11:00 PM GMT (Updated: 4 Sep 2018 7:28 PM GMT)

அன்னவாசல் அருகே பெருமாநாட்டில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயமடைந்தார். இதைக்கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாட்டில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நாமக்கல் மாவட்டம் பொத்தனூரை சேர்ந்த தங்கமணி (வயது47) என்பவர் ஓட்டினார். அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து பெருமா நாட்டை நோக்கி ஒரு சரக்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அதை புதுக்கோட்டை மாவட்டம் வட மலாப்பூரை சேர்ந்த ரெங்கன் (வயது61) ஓட்டியுள்ளார். இந்த நிலையில் பெருமாநாடு முக்கம் அருகே இரண்டு வாகனமும் வந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் சரக்கு ஆட்டோ பள்ளத்தில் இறங்கியது. லாரியும் சாலை ஓரத்தில் இறங்கியது. இதில் சரக்கு ஆட்டோ டிரைவர் ரெங்கன் காயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த ரெங்கனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாநாடு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அங்கு கூடினர். பின்னர் இந்த சாலை விபத்திற்கு சாலைகளில் இருபுறங்களில் மண் நிரப்பாமல் இருந்ததே காரணம் எனக்கூறி, உடனடியாக அதனை சரிசெய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை-குடுமியான்மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா, அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உங்களது கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் பெருமாநாடு அருகே புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பின்பு அந்த பணிகள் முடிந்து இருபுறமும் மண் நிரப்பாமல் உள்ளதால் அவ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையை விட்டு இறக்கும் போது நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் உயிர் பலியும் ஏற்படுகின்றது. எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story