நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2018 5:00 AM IST (Updated: 5 Sept 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வந்தவாசி,

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும், பயிர் காப்பீட்டை முறையாக வழங்க வலியுறுத்தியும் குறைதீர்வு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததுடன் காதில் பூவைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வந்தவாசி தாலுகா விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார பஞ்சாயத்து சேவை மைய கட்டிடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வந்தவாசி நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி, ஒன்றிய ஆணையாளர் பாரி, வந்தவாசி தாசில்தார் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் பெ.அரிதாசு, விவசாய சங்கங்களை சேர்ந்த மருதாடு மணி, பால்ராஜ், பாண்டுரங்கன், வாக்கடை புருஷோத்தமன் உள்பட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மாவட்ட விவசாய உற்பத்தி கழகத்தின் 8 அங்கத்தினர் பதவிக்காலம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது, இதற்கான புதிய அங்கத்தினர்களை நியமிக்க வலியுறுத்தியும், பயிர் மற்றும் மணிலா ஆகியவற்றுக்கு பருவங்கள் முறையே பயிர் காப்பீடு செய்தும், காப்பீடு வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் மற்றும் விவசாயம் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வெளி நடப்பு செய்தனர்.

இதையடுத்து காதில் பூ சுற்றிக்கொண்டும், பூ வைத்துக் கொண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் அவர்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story