ரூ.45 கோடி சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் : 4 பேர் கைது


ரூ.45 கோடி சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் : 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sep 2018 11:04 PM GMT (Updated: 4 Sep 2018 11:04 PM GMT)

மும்பை, குஜராத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.45 கோடி மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

கடலில் இருந்து சுறா மீன்கள் துடுப்புகளுக்காக பிடிக்கப்படுகின்றன. சுறா மீன் துடுப்புகளுக்கு மருத்துவ குணம் மற்றும் பாலுணர்வை தூண்டும் தன்மை இருப்பதாக நம்பப்படுகிறது. சுறாக்களின் துடுப்பை கொண்டு தயாரிக்கப்படும் ருசிமிக்க சூப்பிற்கு விலை மிக அதிகம்.

இதற்காக சுறா மீன்களை உயிரோடு பிடித்து அவற்றின் துடுப்புகளை வெட்டியெடுத்து பிறகு அவற்றை மீண்டும் கடலுக்குள் எறிந்துவிடும் பழக்கம் இருக்கிறது. இவ்வாறு எறியப்படுகிற சுறா மீன்கள் நீந்தி செல்ல முடியாமல் பசியால் வாடி செத்து விடுகின்றன.

இதன் காரணமாக சுறா மீன்களின் துடுப்புகளை வைத்திருக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மும்பை சிவ்ரியில் உள்ள ஒரு குடோனில் அதிகளவில் சுறா மீன் துடுப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த குடோனில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, அங்கு சுறா மீன் துடுப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சுறா மீன் துடுப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக குடோன் உரிமையாளர் சிவ்ராமன், சராபத் அலி, அவரது சகோதரர் ஹமீத் சுல்தான், அகமது ஆசிக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையின் போது, அவர் குஜராத் மாநிலம் வெரவல் பகுதியில் உள்ள ஒரு குடோனிலும் சுறா மீன் துடுப்புகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று அந்த துடுப்புகளையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சுறா மீன் துடுப்புகள் 8 ஆயிரம் கிலோ இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.45 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுறா மீன் துடுப்புகளை கைதானவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story