அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தின விழாவை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பினர் தங்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத சம்பளம் மற்றும் பென்ஷன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் நேற்று ஆசிரியர் தினவிழாவை புறக்கணித்து மாதா கோவில் வீதியில் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆல்பர்ட் மார்ட்டின் அந்தோனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் சேஷாச்சலம் சிறப்புரையாற்றினார். இந்த போராட்டத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.