ஆசிரியர் தின விழா ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்


ஆசிரியர் தின விழா ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:00 PM GMT (Updated: 5 Sep 2018 9:05 PM GMT)

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

சேலம்,


சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர் கடந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கலெக்டர் ரோகிணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது நாங்கள் மேடையில் இருப்பதற்கு முழு காரணம் ஆசிரியர்கள் தான். அதே போன்று மாணவிகளாகிய நீங்கள் வரும் காலத்தில் மேடைக்கு வர காரணமாக இருப்பவர்களும் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை நிறைவேற்ற மாணவ-மாணவிகள் முழு முயற்சி செய்ய வேண்டும்.
மாணவர் பருவம் மிக முக்கியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் ஆசிரியர் அம்மாவாக இருந்தாலும், கல்வி கற்று கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதிக மதிப்பெண்கள் பெறவும், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பவரும் ஆசிரியர் தான். எனவே ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

ஆசிரியர் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பை மாணவ-மாணவிகள் நிறைவேற்ற வேண்டும். நான் (கலெக்டர்) ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அரசு பள்ளியில் தான் படித்தேன். அதே போன்று என்ஜினீயரிங் படிப்பும் அரசு கல்லூரியில் தான் படித்தேன்.
தற்போது அரசு பணியில் உள்ளேன். மாணவ-மாணவிகள் அதிகம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்க வேண்டும். அரசு பள்ளி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகளிடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார். முன்னதாக நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியைகளுக்கு, மாணவிகள் பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story