தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா


தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா
x
தினத்தந்தி 5 Sep 2018 10:30 PM GMT (Updated: 5 Sep 2018 9:40 PM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்தந்த பள்ளிகளில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவபடத்திற்கு ஆசிரிய, ஆசிரியைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த விழாவையொட்டி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அந்தந்த பள்ளி மாணவ-மாணவிகள் பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர் தினவிழாவையொட்டி ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவின்போது ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விளையாட்டு போட்டிகளை மாணவிகள் முன்னின்று நடத்தினார்கள். இந்த போட்டிகளில் பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் உள்பட 40 ஆசிரியர்கள் 80 ஆசிரியைகள் என மொத்தம் 121 பேர் கலந்து கொண்டனர். லக்கி கார்னர் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் படத்திற்கு ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

தர்மபுரியை அடுத்த குப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா, ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா மாணவ-மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்துராஜூ தலைமை தாங்கினார். கல்விக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாது, மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், மேரி, சகாயராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தனர். பின்னர் பொதுமக்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட சீருடைகள் மற்றும் எழுதுபொருட்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்கள். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story