கிருஷ்ணகிரியில் போலீசார், குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் போலீசார், குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:30 PM GMT (Updated: 5 Sep 2018 9:51 PM GMT)

கிருஷ்ணகிரியில் போலீசார், குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில், செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கலெக்டர் டாக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து, பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

காவல்துறை பணியானது மகத்தான பணியாகும். உடல் மற்றும் மன நலம் மிகவும் அவசியமானது.

எனவே, இந்த மருத்துவ பரிசோதனையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமை யோகா வகுப்பில் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும். காவல்துறையினர் ஆரம்ப காலத்திலேயே தங்களுக்கு வரக்கூடிய சிறு, சிறு உடல் சார்ந்த உபாதைகளை சரிசெய்துகொள்ள நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

குடும்பத்தாருடனும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், இதயம் சார்ந்த நோய் பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், எலும்பு முறிவு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டல பொது மேலாளர்கள் அருள்சம்மந்தம், சக்திவேல், தைவான் நாட்டை சேர்ந்த மருத்துவர் நீனா, காவேரி மருத்துவமனை நாகேஷ்குமார், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு, இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிர்வாக பொது மேலாளர் அருண் மகாவிஷ்ணு வரவேற்புரையாற்றினார்.

முடிவில் மனிதவள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் காரல்மார்க்ஸ் நன்றி கூறினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி செய்திருந்தார். 

Next Story