கரூருக்கு இன்று கவர்னர் வருகை பொதுமக்களிடமிருந்து மனுபெறுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்


கரூருக்கு இன்று கவர்னர் வருகை பொதுமக்களிடமிருந்து மனுபெறுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 7 Sept 2018 4:30 AM IST (Updated: 7 Sept 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

கரூருக்கு இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுபெறுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, வளர்ச்சிதிட்ட பணிகளை கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னையில் இருந்து புறப்பட்டு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கரூருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.20 மணியளவில் வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்று, கரூர் தாந்தோன்றிமலையிலுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார். காலை 8.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று கடவூரில் உள்ள சேவாப்பூர் இன்ப சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டுநிறுவன அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வந்து, அங்கு அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 2.30 மணியளவில் இருந்து மாலை 4.30 மணி வரை பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கவர்னர் பெறுகிறார். பின்னர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்று மாலை 5 மணியளவில் மூக்கணாங்குறிச்சியில் உள்ள தடுப்பணை மற்றும் தனிநபர் இல்ல கழிவறையின் பயன்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார். இதைத்தொடர்ந்து வீரணாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை சந்தித்து அவர் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் 5.30 மணியளவில் கரூர் பஸ் நிலையத்திற்கு வந்து தூய்மை இந்தியா இயக்க திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மை பணியை மேற்கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று விட்டு கரூரில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் வருகையையொட்டி கரூர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட போலீஸ் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கவர்னருக்கு எதிராக போராட்டம் உள்ளிட்டவை நடத்த யாரும் ஆயத்தமாகிறார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி முன்எச்சரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநில சுயாட்சிக்கு எதிராக கவர்னரின் ஆய்வு உள்ளது என சுட்டி காட்டி கரூர் மாவட்ட தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏதும் கவர்னருக்கு காட்டினால், தாங்கள் பச்சைக்கொடி வரவேற்போம் என பா.ஜ.க.வின் கரூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் சிவசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

Next Story