கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம் கேரள கொள்ளையன் கொன்று புதைப்பு நெல்லை அருகே உடல் தோண்டி எடுப்பு
கள்ளக்காதல் விவகாரத்தில் கேளராவைச் சேர்ந்த கொள்ளையன் கொலை செய்யப்பட்டு நெல்லை அருகே புதைக்கப்பட்டான்.
நெல்லை,
கள்ளக்காதல் விவகாரத்தில் கேளராவைச் சேர்ந்த கொள்ளையன் கொலை செய்யப்பட்டு நெல்லை அருகே புதைக்கப்பட்டான். அவனது உடலை போலீசார் தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர்.
கொன்று புதைப்புகேரளா மாநிலம் கொல்லம் நகரம் கிளிகொல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சு (வயது 40), வழிப்பறி கொள்ளையன். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி மாயமானார். இதுபற்றி அவருடைய உறவினர்கள் கிளிகொல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சுவை தேடி வந்தனர்.
இது தொடர்பாக அவருடைய கூட்டாளிகள் மையநாட்டை சேர்ந்த உன்னி (27), கிளிகொல்லூரை சேர்ந்த வினேஷ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ரஞ்சுவை அடித்து கொலை செய்து, நெல்லை அருகே பொன்னாக்குடி சமத்துவபுரம் பகுதியில் புதைத்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
கேரளா போலீசார் வருகைஇதையடுத்து கேரளா மாநில போலீசார் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரை தொடர்பு கொண்டு உடலை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அதே நேரத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க வருவாய் துறை அதிகாரிகளின் உதவியும் கோரப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கொல்லம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பங்கஜதாசன், ஷெரீப், சப்–இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் நேற்று பொன்னாக்குடி பகுதிக்கு வந்தனர். உடனே நெல்லை மாவட்ட பயிற்சி கலெக்டர் சுகபுத்ரா, பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி, வருவாய் ஆய்வாளர் ரேகலா, முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
உடல் தோண்டி எடுப்புபின்னர் கேரளா போலீசார் அழைத்து வந்த கொலையாளி உன்னி, ரஞ்சுவை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். பொன்னாக்குடி சமத்துவபுரம் அருகில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயையொட்டி தோண்டப்பட்டிருந்த ஒரு பள்ளத்தில் ரஞ்சுவின் உடலை போட்டு, அதன் மீது அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சரள் மண்ணை போட்டு மூடி வைத்திருந்தனர்.
கேரளா போலீசார் அந்த பள்ளத்தை தோண்டி ரஞ்சுவின் உடலை மீட்டனர். உடல் புதைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் அழுகிய நிலையில் காணப்பட்டது, துர்நாற்றமும் வீசியது. அந்த உடலை உறவினர்கள் பார்த்து ரஞ்சுதான் என்று உறுதி செய்தனர்.
இதையடுத்து கொல்லம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிரேம், அந்த இடத்திலேயே ரஞ்சுவின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவடைந்து ரஞ்சுவின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கள்ளக்காதல் விவகாரம்இந்த பயங்கர கொலை குறித்து கேரளா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:–
கொலை செய்யப்பட்ட ரஞ்சு, பிரபல வழிப்பறி கொள்ளையன் ஆவான். இவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளான். இந்த நிலையில் ரஞ்சுவின் கூட்டாளி மனோஜ் என்ற பாம்பு மனோஜ் ஒரு வழக்கில் கைதானார். அவர் 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது மனோஜின் மனைவி ஜெசிக்கும் ரஞ்சுவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது மனோஜூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனோஜ் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலை ஆனார். வீட்டுக்கு வந்த மனோஜிக்கும், ரஞ்சுவுக்கும் தகராறு ஏற்பட்டது.
அடித்துக்கொலைஇதையடுத்து மனோஜ், ரஞ்சுவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். கடந்த மாதம் 15–ந்தேதி மனோஜ், அவரது கூட்டாளிகள் உன்னி, வினேஷ், லாரி டிரைவரான மற்றொரு உன்னி, குக்கு, விஷ்ணு ஆகிய 6 பேரும் ரஞ்சு வீட்டுக்கு சென்றனர்.
குத்து சண்டை வீரரான ரஞ்சுவை நேரடியாக கொலை செய்ய முடியாது. அதே நேரத்தில் வாத்து பிரியரான அவர் தனது வீட்டில் வாத்து வளர்த்து வந்தது தெரியவந்தது. எனவே ஓரிடத்தில் வாத்து அதிகமாக உள்ளது, அதனை வாங்கி வருவோம் என்று அவரை வெளியே அழைத்துச் சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றபோது அனைவரும் சேர்ந்து மது குடித்தனர். போதை மயக்கத்தில் கிடந்த ரஞ்சுவை அவர்கள் உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக அடித்து கொலை செய்தனர். பின்னர் தாங்கள் வந்திருந்த 2 கார்களில், ஒரு கார் டிக்கியில் ரஞ்சுவின் உடலை தூக்கிப்போட்டனர்.
நெல்லை அருகே புதைத்தது ஏன்?பின்னர் மனம் போன போக்கில் அவர்கள் 2 கார்களில் பயணம் செய்து உள்ளனர். இவ்வாறாக அவர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்து நெல்லை மாவட்டம் நாங்குநேரியை கடந்து நெல்லை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். பொன்னாக்குடி சமத்துவபுரம் அருகில் வந்த போது ஒரு காரின் டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து அந்த டயரை கழற்றிவிட்டு, மாற்று டயரை பொருத்தினார்கள். இதற்காக சுமார் ½ மணி நேரம் அங்கு நின்றுள்ளனர்.
அப்போது லாரி டிரைவர் உன்னி, லாரியில் அடிக்கடி இந்த பகுதிக்கு வரும்போது மழைக்காலத்தில் இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்கி உள்ளார். இதனால் அவருக்கு அந்த பகுதியில் குழிகள் இருப்பது ஏற்கனவே தெரிந்து வைத்துள்ளார். இதையடுத்து அந்த பள்ளத்தில் ரஞ்சுவின் உடலை புதைத்து விட்டு சென்று விடலாம் என்று ஆலோசனை கூறிஉள்ளார்.
இதையடுத்து கார்களில் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் உள்ளே சென்று அங்குள்ள ஒரு பள்ளத்தில் ரஞ்சுவின் உடலை வைத்து, அதன் மீது மண்ணை போட்டு மூடிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
மீட்க உதவிய செல்போன் எண்ரஞ்சுவின் செல்போன் எண்ணைக்கொண்டு நாங்கள் விசாரணை செய்தபோது பொன்னாக்குடி பகுதியில் உள்ள செல்போன் கோபுர சிக்னலில் நீண்ட நேரம் இருந்தது தெரியவந்தது. மேலும் அதே நேரத்தில், அதே செல்போன் கோபுரத்தில் பதிவாகி இருந்த கேரளா மாநில செல்போன் எண்களை சேகரித்தோம். அவற்றை கொண்டு கொலையாளிகள் குறித்து விசாரித்து துப்பு துலக்கினோம். இந்த கொலை சம்பவத்தில் ரஞ்சுவின் கள்ளக்காதலியின் கணவர் பாம்பு மனோஜ், அவரது கூட்டாளிகள் உன்னி, வினேஷ், மற்றொரு உன்னி, குக்கு, விஷ்ணு ஆகிய 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் உன்னி, வினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளோம். மேலும் 4 பேரை தேடி வருகிறோம். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க தேவையான ஆதாரங்களை திரட்டி உள்ளோம்.
இவ்வாறு கேரளா போலீசார் தெரிவித்தனர்.