ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறு,
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
7 பேரை விடுவிக்க ஏற்பாடுதூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சிதம்பரபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதற்கு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தபோதும், ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு முனைப்புடன் செயலாற்றினார்.
தொடர்ந்து அவரது வழியில் செயல்படும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதில் உறுதியாக இருந்தது.
இதனால்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்து, கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அவர்களை விடுதலை செய்வதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு நிச்சயமாக உறுதியுடன் செய்யும். இதில் எந்த மாற்றமும் இருக்காது.
வரலாறு இல்லைமத்திய அரசின் சி.பி.ஐ. மூலம் ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. பல்வேறு நிலைகளிலும், பொறுப்புகளிலும் இருக்கின்றவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை நடைபெறும்போதே பதவியை ராஜினாமா செய்ததாக வரலாறு இல்லை.
கடந்த 1976–ம் ஆண்டு ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. நமது நாட்டில் ஊழலுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டது தி.மு.க. ஆட்சி மட்டும்தான். அந்த ஆட்சியில் விஞ்ஞானப்பூர்வமான ஊழல் நடந்தது.
குட்கா ஊழல்குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முழு ஒத்துழைப்பு தருகிறார். அவர், ‘தனது மடியில் கனம் இல்லை என்பதால், வழியில் பயம் இல்லை’ என்று கூறி உள்ளார். இந்த விசாரணையில் தமிழக அரசும் குறுக்கிடவில்லை. பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்கள் மீது பலரும் புகார் தெரிவிப்பார்கள். அவற்றை விசாரித்து நீதிபதி தண்டனை வழங்கும் வரையிலும், அவர் குற்றவாளி கிடையாது.
தி.மு.க. எங்களுக்கு எதிர்க்கட்சி அல்ல, எதிரிக்கட்சிதான். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதலில் தனது கட்சியில் உள்ள சகோதர சண்டைக்கு தீர்வு காணட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.