கோவையில் எலிக்காய்ச்சலுக்கு கேரள லாரி டிரைவர் பலி
கோவையில் தங்கி இருந்த கேரள லாரி டிரைவர் எலிக்காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை,
கேரளாவில் சமீபத்தில் எலிக்காய்ச்சல் பரவியது. இதன் பாதிப்பு தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, தமிழக–கேரள எல்லைகளில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு, கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்கள் மீது தடுப்பு மருந்துகள் தெளிக்கும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் ஒருவர் எலிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு:–
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்ணாமடை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). லாரி டிரைவர். இவர் ஒரு மாதமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு துர்க்காதேவி, ஹாசினி என்ற 2 மகள்களும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
கேரளாவில் மழை வெள்ள பாதிப்பின் போது சதீஷ்குமார் பாலக்காட்டில் இருந்துள்ளார். அதன் பின்னர் அவர் கொண்டம்பட்டிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27–ந் தேதி சதீஷ்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 5–ந் தேதி அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள், சதீஷ்குமாருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், தனியார் ஆஸ்பத்திரியில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக, கோவையில் எலிக்காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறையின் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.