ஆம்னி பஸ் தாமதமாக புறப்பட்டதால் விமானத்தை தவறவிட்டார்: பயணிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


ஆம்னி பஸ் தாமதமாக புறப்பட்டதால் விமானத்தை தவறவிட்டார்: பயணிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Sept 2018 4:00 AM IST (Updated: 7 Sept 2018 9:25 PM IST)
t-max-icont-min-icon

ஆம்னி பஸ் தாமதமாக புறப்பட்டதால் விமானத்தை தவறவிட்ட பயணிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகையை டிராவல்ஸ் நிறுவனம் வழங்க மதுரை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் அமரியை சேர்ந்த பாஸ்கரன், மதுரை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நான் ஈராக்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றினேன். கடந்த 2015–ம் ஆண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தேன். பின்னர் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக விமான டிக்கெட் எடுத்தேன். அதன்படி 5.4.2015 அன்று சென்னையில் இருந்து பக்ரைன் செல்லும் விமானத்தில் செல்ல டிக்கெட் வழங்கப்பட்டது. அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் 9.15 மணிக்கு விமானம் புறப்படும் என்றும், 8.15 மணிக்குள் விமானநிலையத்துக்கு பயணிகள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து 4.4.2015 அன்று மதுரையில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு சென்னைக்கு சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதை நம்பி, நான் அந்த பஸ்சில் ஏறி அமர்ந்தேன். ஆனால் மதுரையில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் புறப்படவில்லை.

இதுபற்றி டிராவல்ஸ் நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு, பயணிகள் வர வேண்டியது உள்ளதால் தாமதம் ஆகிறது. இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு சென்றுவிடுவோம் என்றனர். சுமார் 2 மணி நேரம் கழித்து 12.45 மணிக்கு தான் அந்த பஸ் சென்னைக்கு புறப்பட்டது. இரவு 10 மணிக்கு தான் சென்னைக்கு பஸ் சென்றது. இதனால் நான் பக்ரைன் செல்லும் விமானத்தை தவறவிட்டு விட்டேன். மேலும் உரிய நேரத்தில் ஈராக் நிறுவனத்தில் பணியில் சேர முடியாததால், கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டேன். இதனால் ஏற்பட்ட எனக்கு மனஉளைச்சலுக்கு உரிய இழப்பீட்டை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, மறைக்காமலை ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினரின் சேவைக்குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக, அவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story