காங்கிரஸ் கட்சி சார்பில் 10–ந்தேதி முழு அடைப்பு: அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும்
வருகிற 10–ந்தேதி நடைபெற உள்ள முழு அடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தநாள் முதல் நாட்டு மக்கள் தினந்தோறும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஜனநாயக மாண்புகளை மறந்துவிட்டு சர்வாதிகாரமாக பல்வேறு சட்டங்களை இயற்றி சாமானிய மக்களின் வாழ்க்கையை பாழ்படுத்துகின்ற செயலை பாரதீய ஜனதா அரசு தினந்தோறும் செய்து வருகிறது.
பணமதிப்பிழப்பு சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு போன்ற படுபாதக திட்டங்களினால் இந்திய நாடு இன்று பாழ்பட்டு போய்விட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு சென்றுவிட்டது. வருடத்துக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவேன் என்று கூறிய நரேந்திர மோடி எந்தவிதமான புதிய திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை.
வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருந்த இந்திய நாட்டை கவர்ச்சி அரசியலில் சிக்கவைத்து நாட்டின் முன்னேற்றத்தை பாரதீய ஜனதா அரசு பட்டவர்த்தனமாக சீர்குலைத்து கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையோ நாளுக்கு நாள் விஷம்போல் ஏறி வருகிறது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கேள்விக்குறியாகி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவராமல் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டவேண்டும் என்ற குறிக்கோளுடன் மத்திய அரச செயல்படுகிறதே தவிர மக்கள் நலனில் அக்கறை காட்ட மறுக்கிறது.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் பறிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை, அப்பாவி மக்கள் மீது மதவெறியுடன் கொலைவெறி தாக்குதல், முற்போக்கு எழுத்தாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் மீது பொய்யான கொலை முயற்சி வழக்கு போன்றவை தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. மனிதாபிமானமற்ற இந்த கொடுஞ்செயலை மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
வளர்ச்சி என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு கவர்ச்சி அரசியலால் நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மக்கள் விரோத பாரதீய ஜனதா அரசுக்கு உணர்த்தும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 10–ந்தேதி நாடு முழுவதும் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தேசிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
நாட்டின் ஒற்றுமையை பேணிக்காக்க, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை குறைக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத நரேந்திரமோடி தலைமையிலான அரசுக்கு பாடம் புகட்ட நடைபெற உள்ள முழுஅடைப்புக்கு புதுவை மாநில அனைத்து கட்சிகளும், சமூக அமைப்புகளும், வியாபாரிகளும், பொதுமக்களும், முழு ஆதரவு தந்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.