ஒரே மாதத்தில் 18 குழந்தை திருமணங்கள்: குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல்; கலெக்டர் எச்சரிக்கை


ஒரே மாதத்தில் 18 குழந்தை திருமணங்கள்: குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல்; கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Sep 2018 11:30 PM GMT (Updated: 7 Sep 2018 9:16 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்ணிற்கு 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் தற்போது வரை 137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரே நாளில் மட்டும் 3 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

குழந்தை திருமணம் செய்யும் பெண்ணுக்கு கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடைகுறைவான குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

ரத்த சோகை, உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வி அறிவு தடைப்பட்டு தன்னம்பிக்கை குறைவு, படிப்பறிவு, பொது அறிவு குறைவு போன்றவை ஏற்படுகிறது. இதனால் பாலியல் ரீதியான பிரச்சினைகள், கணவன்- மனைவி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. கணவன், மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம் விதவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குழந்தை திருமணத் தடைச்சட்டம் 2006-ன் படி குழந்தைத் திருமணம் என்பது குற்றம், பிணை ஆணை வழங்கா குற்றமாகும். குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து வழங்க வாய்ப்பு உள்ளது.

18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதுபோல 21 வயது நிறைவடையாத ஆண் ஒருவரை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளியாவார். குழந்தை திருமணத்தை நடத்தியவர், நடத்த தூண்டியவர் அனைவரும் குற்றவாளிகள். அப்பெண் குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் அல்லது காப்பாளர் மற்றும் குழந்தை திருமணத்தை ஏற்பாடு செய்த, அனுமதித்த, பங்கேற்ற மற்றும் அந்த திருமணத்தை தடுக்க தவறிய எந்த நபரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்காவது குழந்தை திருமணம் நடைபெறுவதாக முன்கூட்டியே தகவல் அறிந்தால் பொதுமக்கள் அதுபற்றி உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சமூகநல அலுவலகம், போலீஸ் நிலையம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்பவரது விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில், பொதுமக்கள் குழந்தை திருமணம் நடத்துவதைத் தவிர்த்திட முன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story