டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு


டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 Sep 2018 11:15 PM GMT (Updated: 7 Sep 2018 9:56 PM GMT)

ராணிப்பேட்டை அருகே டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த அக்ராவரம் மலைமேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 34), டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவியுடன் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் தியாகராஜன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து தியாகராஜன் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

* நாட்டறம்பள்ளியை அடுத்த கோழிமூக்கனூரை சேர்ந்தவர் செந்தில் (40), ஜவுளி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வெலக்கல்நத்தம் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் சென்ற மோட்டார்சைக்கிளின் பின்புறம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

* ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் ரெயில்களில் நேற்று ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயிலில் இருக்கைக்கு அடியில், கழிவறையில் சிறு சிறு மூட்டைகளில் பதுக்கி வைத்து, வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன் அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

* பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் பள்ளக்குன்னத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* ஜோலார்பேட்டை போலீசார் நேற்று சாராய வேட்டை நடத்தினர். அப்போது மதுபான பாட்டில்களை விற்பனை செய்த லாரிசெட் பகுதியை சேர்ந்த மணி (65), சக்கரகுப்பம் நேதாஜிரோடு பகுதியை சேர்ந்த மல்லிகா (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

* தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான தகரகுப்பம் பகுதியில் திம்மாம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 டிராக்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் டிரைவர்கள் டிராக்டர்களை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திமிரியை அடுத்த மகமதுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (70), விவசாயி. இவர் நேற்று காலை தனது குடிசை வீட்டின் கதவை மூடிவிட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த கலவை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திருவலம் அருகே உள்ள கார்ணாம்பட்டை சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவர் சமத்துவபுரம் அருகே உள்ள திருவலம் - காட்பாடி சாலையில் தனது மனைவி பவானி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். முன்னால் சென்ற தனியார் கல்லூரி வேன் மாணவர்களை இறக்கி விடுவதற்காக நின்றது. அப்போது திடீரென விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பவானியும் குழந்தையும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திமிரி மாருதி நகரை சேர்ந்தவர் திருஞானம், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அமுதா, புங்கனூர் அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் சுபநிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அமுதா திமிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* பெங்களூரு குமாரசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ரவீனப்பகாய். இவரது மகன் சேட்டன் ஆர்காய் (28) கோவைக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து திருப்பத்தூர் வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரெயில் சேலத்தை கடந்து திருப்பத்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தூங்கிக்கொண்டிருந்த சேட்டன்ஆர்காய், எழுந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த பை காணாமல் போனது. அதில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஆகியவை இருந்தது. அதனை யாரோ திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. அது குறித்து அவர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story