ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டிடம் சி.ஐ.டி.யு.வினர் மனு


ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டிடம் சி.ஐ.டி.யு.வினர் மனு
x
தினத்தந்தி 8 Sept 2018 4:47 AM IST (Updated: 8 Sept 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் சி.ஐ.டி.யு.வினர் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியிடம், திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியனை சேர்ந்தவர்கள் (சி.ஐ.டி.யு.) ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பகுதியில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், சுற்றுலா வேன், கார் மற்றும் பயணிகள் ஆட்டோக்கள் என வாடகைக்கு இயங்கி வருகின்ற சுமார் ஆயிரக்கணக்கான வாகனங்களில் ஓட்டுனர்களாகவும், சிறிய வாகன வாடகை தொழில் செய்து தங்களது குடும்பத்தையும் பலர் நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக வாடகை வாகன ஓட்டுனர்கள் மீது உடுமலை வட்டார போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், குடிமங்கலம், மடத்துக்குளம், குமரலிங்கம் ஆகிய நகரங்களின் போலீசார் ஓட்டுனர்கள் மீது சட்ட வரம்புக்கு மீறி, சிறு சிறு குற்றங்களுக்கு கூட அபரிவிதமான அபராத கட்டணங்களை வசூல் செய்கின்றனர். மேலும், உடனடியாக அபராதம் அதிகளவு விதிக்கிறார்கள். இதன் பின்னர் ரசீது கேட்டால் கொடுக்காமல் மிரட்டுகிறார்கள்.

அபராத கட்டணங்களை அதிகமாக வசூலிப்பதோடு ஓட்டுனர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமான ஓட்டுனர் உரிமத்தையும் பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வரும்படி ஓட்டுனர்களை அலைக்கழிக்கிறார்கள். இதனால் ஏராளமான ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு, தொழில் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபோல் ஓட்டுனர்கள் மீது போலீசார் வைத்திருக்கும் வழக்கு பதிவேட்டில் பதிவு செய்யும் போது, ஓட்டுனர்கள் செய்த குற்றங்கள் குறித்து தெளிவாக குறிப்பிடாமல், செய்யாத குற்றத்தை செய்ததாக மாற்றி பதிவு செய்து, அதற்கான அபராத கட்டணங்களையும், ஓட்டுனர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையையும் மேற்கொள்கின்றனர். இத்தகைய செயல் ஓட்டுனர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டுனர்கள் மிகவும் அச்சத்துடனே தொழில் செய்யும் நிலை உள்ளது. உடுமலை வட்டார போலீசாரின் இத்தகைய நடவடிக்கைகள் போலீசாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நிலையை உருவாகி வருகிறது. இந்த நிலைமைகளை மாற்ற ஆவன செய்ய வேண்டும். ஓட்டுனர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தற்போது அபராத கட்டணங்கள் வசூல் செய்தும், பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை திரும்ப பெறாத 100-க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு அதனை உடனடியாக திரும்ப கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story