விளம்பரம் தேடிக் கொள்வதற்காக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுவது சரியல்ல


விளம்பரம் தேடிக் கொள்வதற்காக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுவது சரியல்ல
x
தினத்தந்தி 7 Sep 2018 11:21 PM GMT (Updated: 7 Sep 2018 11:21 PM GMT)

விளம்பரம் தேடிக்கொள்வதற்காக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதுவது ஏற்றுக் கொள்ளப்படாத நடைமுறை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மும்பை,

புனே மாவட்டம் பீமா- கோரேகாவ் பகுதியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும் என்று சதீஷ் கெய்க்வாட் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல் அப்துல் மாலிக் சட்டர்ஜி என்ற சமூக ஆர்வலர் மாநில சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த 2 மனுக்களும் நேற்று நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மிரிதுலா பாத்கர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்துல் மாலிக் சட்டர்ஜி தாக்கல் செய்திருந்த மனுவில் தன் கோரிக்கை குறித்து, பிரதமர், ஜனாதிபதி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார். இதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கூறியதாவது:-

அப்துல் மாலிக் சட்டர்ஜி அனுப்பிய கடிதத்தில் மனுதாரர் பலருக்கு எதிராக தனது கருத்துகளை முன்வைக்கிறார். மேலும் இந்த சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். சட்டத்தின் செயல்முறையை பின்பற்றுவதற்குப் பதிலாக மக்கள் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதங்களை எழுதுவது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.

ஒருவர் தனது புகார்களை போலீஸ் மூலமோ அல்லது மாஜிஸ்திரேட்டு மூலமோ தெரிவிக்க தான் சட்டம் அனுமதிக்கிறது. இந்த மனுதாரர் வெறும் விளம்பரத்திற்காகவும், புகழ்ச்சிக்காகவும் இப்படி செய்ததாக தெரிகிறது. இது சரியல்ல.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். 

Next Story