அதிகாரிகள் நடவடிக்கையால் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு


அதிகாரிகள் நடவடிக்கையால் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
x
தினத்தந்தி 7 Sep 2018 11:48 PM GMT (Updated: 7 Sep 2018 11:48 PM GMT)

கோகூர் ஊராட்சி வடக்கு பாப்பாக்குடி பகுதியில் அதிகாரிகள் நடவடிக்கையால் பழுதான குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டன.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சி வடக்கு பாப்பாக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாத காரணத்தால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் வடக்கு பாப்பாக்குடி பகுதியில் பல இடங்களில் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் குடிநீர் வினியோகம் சீராக இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கையால் ஊராட்சி ஊழியர்களை கொண்டு பழுதடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து, கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story