நெல்லை திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்


நெல்லை திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Sept 2018 3:52 PM IST (Updated: 8 Sept 2018 3:52 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் திருமண்டல நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் திருமண்டல நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அமைச்சரிடம் கோரிக்கை மனு

நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேற்று நெல்லை திருமண்டல லே செயலாளர் வேதநாயகம் மற்றும் நிர்வாகத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகத்தில் 74 நடுநிலைப்பள்ளிகளும், 249 தொடக்கப்பள்ளிகளும் அரசு அங்கீகாரம் பெற்று அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. எங்கள் பள்ளிகள் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளிக்கூடங்களில் ஓய்வு பெற்ற காலியிடங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்தோம். ஆனால் அதற்கு அரசு இதுநாள் வரை ஒப்புதல் வழங்கவில்லை.

எங்கள் நிர்வாகம் பொறுப்பேற்ற உடன் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அப்போது அதிகாரிகள் பணி நிரவல் முடிந்தவுடன் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை. அதன்பின்னர் 2017-ம் ஆண்டுக்குரிய உபரி ஆசிரியர் பட்டியல் வழங்கப்பட்டது. இப்பட்டியலுக்கு பணி நிரவல் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஒப்புதல் வழங்க வேண்டும்

மேலும் இந்த பட்டியலுக்கு ஒப்புதல் வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. ஆகவே எங்களது நிர்வாகத்தில் தகுதியுள்ள பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு கடந்த மே மாதம் 25-ந் தேதி வழங்கப்பட்ட உபரி ஆசிரியர் பட்டியல் அடிப்படையிலான பணிநிரவல் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருமண்டல தலைவர் பில்லி, குருத்துவ செயலாளர் பீட்டர் தேவதாஸ், மேலாண்மை கமிட்டி தலைவர் விஜிலா சத்யானந்த் எம்.பி., ஆரம்ப நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஆபிரகாம், சபை மன்ற தலைவர்கள், சாராள் தக்கர் கல்லூரி தாளாளர் சாம்சன் பால்ராஜ், கல்வி நிலவரக்குழு செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், திருமண்டல வழக்கறிஞர் காமராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ஜோதிராஜ், டயோசீசன் புத்தக கிளை கண்காணிப்பாளர் ஜீவக்குமார், திருமண்டல அச்சக கண்காணிப்பாளர் ராஜா தனசிங், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் காபிரியேல் தேவா, உக்கிரன்கோட்டை பள்ளி தாளாளர் பீட்டர் ஜான், பெருமன்ற உறுப்பினர் ஏ.சி.டி.ராஜன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, தமிழ்நாடு கல்வி மானியக்குழு உறுப்பினர் காபிரியேல் ஜெபராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் திருமண்டல சபை குருவானவர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story