மாவட்ட செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; 4 தொழிலாளர்கள் கருகி சாவு + "||" + Fireworks crash near Sivakasi 4 workers killed

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; 4 தொழிலாளர்கள் கருகி சாவு

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; 4 தொழிலாளர்கள் கருகி சாவு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 800–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த வருட தீபாவளிக்கான பட்டாசு தயாரிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்தில் உள்ள ராஜு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் பணி தொடங்கியது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 50–க்கும் அதிகமான அறைகள் உள்ளன. இதில் 150–க்கும் அதிகமான தொழிலாளர்கள் நேற்று பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காலை 10 மணி அளவில் ஆலையில் உள்ள வெடிமருந்து கலவை அறையில் விளாம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 45), சன்னாசிபட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (38), மம்சாபுரத்தை சேர்ந்த பாண்டி (43), துரைச்சாமிபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி (45) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமானது. இதில் கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பாண்டி, பொன்னுசாமி ஆகியோர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு, தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்களும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் அதே ஆலையில் பணியாற்றி வந்த தேவி என்ற பெண் லேசான காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அங்கு வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

வெடிவிபத்து குறித்து ஆலையின் உரிமையாளர் ராஜூ, மேலாளர் மாரிச்சாமி, போர்மென் சுப்பிரமணியன் ஆகியோர் மீது மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் மாரிச்சாமி, சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...