திருமணம் செய்து வைக்க ஆசை: இறுதிகாலத்தை மகனுடன் வாழ விரும்புகிறேன், கைதி ரவிச்சந்திரனின் தாயார் உருக்கம்


திருமணம் செய்து வைக்க ஆசை: இறுதிகாலத்தை மகனுடன் வாழ விரும்புகிறேன், கைதி ரவிச்சந்திரனின் தாயார் உருக்கம்
x
தினத்தந்தி 9 Sept 2018 4:30 AM IST (Updated: 8 Sept 2018 10:19 PM IST)
t-max-icont-min-icon

இறுதி காலத்தை தனது மகனுடன் வாழ விரும்புவதாக ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் உருக்கமுடன் கூறினார்.

அருப்புக்கோட்டை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. சிறையில் இருப்போரில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி வேலாயுதபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரனும் ஒருவராவார்.

இவரது தந்தை பொய்யாழி வேளாண்மை துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாயார் ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அவருக்கு மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

எனது மகன் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறான். அவனை விடுதலை செய்யக் கோரி பல முறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். விடுதலை செய்யப்படவில்லை. இந்த நிலையில் எனது கணவர் பொய்யாழி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், அவர் இறந்த போதும் என 4 முறை பரோலில் வீட்டிற்கு ரவிச்சந்திரன் வந்துள்ளான்.

நான் பலமுறை எனது மகனை பார்ப்பதற்கு சிறைக்கு சென்று உடல்நலம் விசாரித்து வந்துள்ளேன். தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எனது மகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் உள்ளது என்று கூறியுள்ளது. இது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக எனது மகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாள் பிரிந்த என் மகன் விடுதலையாகும் போது அவனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். எனக்கும் வயது ஆகிவிட்டது இறுதி காலத்தை ரவிச்சந்திரனுடன் வாழ ஆசைப்படுகிறேன்.

7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவையை கூட்டும் அரசின் முயற்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story