கிரானைட் கற்கள் ஏற்றி வந்த போது டயர் வெடித்தது; லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
கொட்டாம்பட்டி அருகே கிரானைட் கற்களை ஏற்றிவந்தபோது டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொட்டாம்பட்டி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகரடியூரை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் மணிகண்டன் (45). லாரி டிரைவரான இவர், பெங்களூரில் இருந்து பாலிஷ் செய்யபட்ட கிரானைட் கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வந்துள்ளார்.
லாரி கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பட்டி விலக்கு மதுரை– திருச்சி நான்கு வழி சாலையில் வரும்போது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியை அருகே இருந்த கடைகள் மற்றும் பொதுமக்கள் மீது மோதாமல் தடுக்க போராடி 500 மீட்டர் தூரம் சாலையை விட்டு விலகி டிரைவர் ஓட்டியதால் லாரி 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் லாரியும், கிரானைட் கற்களும் நொறுங்கின. இதில் சிக்கிய டிரைவர் மணிகண்டன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் மேலூர் தீயணைப்பு வீரர்கள், தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஜே.சி.பி.எந்திரம் மூலம் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மணிகண்டன் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.