2–வது நாளாக வருமானவரி அதிகாரிகள் முகாம்: காண்டிராக்டர் செய்யாத்துரை மகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீட்டில் 2–வது நாளாக விசாரணை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அவருடைய மகன் நாகராஜனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்த அரசு காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் சென்னையில் உள்ள அலுவலகம், வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடிமன்னார் கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் வீடும் தப்பவில்லை.
இந்த சோதனையின்போது ஏராளமான நகைகள், கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இவை அனைத்தும் அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் தலைமை அலுவலகத்தின் ஒரு அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்தநிலையில் 2 மாதங்களுக்கு பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் திடீரென செய்யாத்துரையின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ‘சீல்’ வைக்கப்பட்ட அலுவலக அறையை செய்யாத்துரையின் மகன் நாகராஜன் முன்னிலையில் திறந்தனர். அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வந்து செய்யாத்துரை மற்றும் அவரது மகன்கள், ஆடிட்டரிடம் விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் விசாரணையை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
2–ம் நாளான நேற்று காலை 10.30 மணிக்கு மீண்டும் செய்யாத்துரையின் வீட்டிற்கு 10–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகராஜனை அலுவலக அறைக்கு தனியாக அழைத்துச் சென்று பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.