500 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


500 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
தினத்தந்தி 9 Sept 2018 5:00 AM IST (Updated: 9 Sept 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 500 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

வேலூர்,

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறினார். அதன்அடிப்படையில் தமிழகம் முழுவதும் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 653 பேருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி 100 பேருக்கும், 23-ந் தேதி 1000 பேருக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று 500 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்து. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு இருசக்கர வாகனங்கள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக இருசக்கர வாகனங்கள் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 653 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் அதிகமானவர்கள் பயன்பெறுகிறார்கள். ஜெயலலிதாவின் அரசு பெண்களுக்கான அரசாகும். பெண் குழந்தைகள் இறப்பை தடுக்க அவர் கொண்டு வந்த திட்டம் தான் தொட்டில் குழந்தை. இத்திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டு உயர்கல்வி படித்து வருகின்றனர்.

இத்திட்டம் குறித்து அறிந்த அன்னை தெரசா ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டினார். ஜெயலலிதா பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பிறப்பு, படிப்பு, திருமணம் போன்ற பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். இந்தியாவிலேயே பெண்களுக்கான தனி நலவாரியம் அமைத்தார். பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள், சம உரிமை உண்டு என பெண்களுக்கான உரிமைகளை பெற்று தந்தார். அவர் வழி நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராமன் பேசுகையில், “வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. பெண்கள் வாழ்வில் முன்னேற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். இருசக்கர வாகனம் வழங்குவது என்பது கவர்ச்சி திட்டம் அல்ல. உழைக்கும் பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு முன்மாதிரி திட்டமாகும்” என்றார். இதில், அ.தி.மு.க. அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் காந்தி நன்றி கூறினார்.

Next Story