மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும் - விடுதலை வேங்கைகள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்
மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை கைவிடக்கோரி விடுதலை வேங்கைகள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் சாகர் மாலா திட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுவை செஞ்சி சாலை பாரதிதாசன் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி விடுதலை வேங்கைகள் நிறுவனரும், அமைப்பாளருமான மங்கையர் செல்வன் தலைமை தாங்கி பேசினார். புதுவை மாநில முதன்மை செயலாளர் மோகன், துணை பொதுச்செயலாளர் பரசுராமன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும், கடற்கரை மண்டல மேலாண்மை வரைபட வரைவு திட்டத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் மாவட்ட வாரியாக மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்த மத்திய–மாநில அரசுகளை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
புதுச்சேரி மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்ந்துபோய் உள்ளது. விசைப்படகு தரைத்தட்டி சேதமடைகிறது. எனவே கடலில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். புதுச்சேரி மீன்வளத்துறை கடந்த 3 ஆண்டுகளாக மீனவர்களுக்கு புயல்கால நிவாரண உதவித்தொகை வழங்கவில்லை. புயல்கால நிவாரணத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
புயல்கால நிவாரணத்தொகையை தமிழகத்தை போல புதுவையிலும் ரூ.4,500 ஆக வழங்க வேண்டும். வேதிப்பொருட்களால் உருவான விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதால் மீன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே வேதிப்பொருட்களான உருவான விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடை செய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தலைமை ஆலோசகர் கங்காதரன் வரவேற்றார். இதில் புதுச்சேரி விடுதலை வேங்கைகள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பெருமாள் நன்றி கூறினார்.