சிங்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்: வீடு, கடையை சேதப்படுத்தியது


சிங்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்: வீடு, கடையை சேதப்படுத்தியது
x
தினத்தந்தி 10 Sept 2018 4:00 AM IST (Updated: 10 Sept 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

சிங்கோனா எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் வீடு, கடையை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை பத்தாம்பாத்தி குடியிருப்பு பகுதிக்குள் 7 காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. பின்னர் யானைகள் தோட்ட அதிகாரி கிருஷ்ணன் என்பவரின் வீட்டு சுவரிரை இடித்து தள்ளியது. பின்னர் துதிக்கையை உள்ளே விட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.

பின்னர் கல்யாணி என்பவரின் மளிகைக்கடையையும் உடைத்து சேதப்படுத்தியது. இதனை தொடர்ந்து அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் உபாசி பகுதியில் உள்ள அரசு நலப்பள்ளியின் சத்துணவு மையத்தை உடைத்தது. உள்ளே உணவு பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று தேடியது. ஆனால் சத்துணவு மையத்தில் பொருட்கள் ஏதும் இல்லாததால் பள்ளிக்கூட வளாகத்துக்குள் புகுந்து மேலும் சேதங்களை ஏற்படுத்த முயற்சி செய்தது.

அதற்குள் தகவல் அறிந்து மானாம்பள்ளி வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் சிங்கோனா எஸ்டேட் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story