காங்கிரஸ் சார்பில் முழுஅடைப்பு: புதுவையில் பஸ்கள்– ஆட்டோக்கள் ஓடாது


காங்கிரஸ் சார்பில் முழுஅடைப்பு: புதுவையில் பஸ்கள்– ஆட்டோக்கள் ஓடாது
x
தினத்தந்தி 10 Sept 2018 5:00 AM IST (Updated: 10 Sept 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த முழுஅடைப்பு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது.

புதுச்சேரி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புக்கு தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக புதுவையில் இன்று (திங்கட்கிழமை) பஸ்கள் ஆட்டோக்கள் ஓடாது. தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியே இந்த முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதால் அரசு பஸ்களும் இயக்கப்படாது என்று தெரிகிறது.

தொகுதிதோறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்யுமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் இணைந்து முழு அடைப்புக்கு ஆதரவு திரட்டும் பணியிலும் ஈடுபட்டனர்.

முழுஅடைப்பினையொட்டி புதுவையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


Next Story