குறும்பனையில் காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குறும்பனையில் சொகுசு காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குளச்சல்,
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் போன்றவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
இதை தடுக்கும் வகையில் போலீசார் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் அரசு பஸ், சொகுசு கார் என நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குளச்சல் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குளச்சல் அருகே குறும்பனை பகுதியில் சென்ற போது கேரள பதிவு கொண்ட ஒரு சொகுசு கார் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்தது.
உடனே அதிகாரிகள் காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது அதில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story