உச்சிப்புளி அருகே கார் விபத்தில் 4 பேர் சாவு: திருமணமான 4 மாதத்தில் என்ஜினீயர் பலியான பரிதாபம்
உச்சிப்புளி அருகே நடைபெற்ற கார் விபத்தில் திருமணமாகி 4 மாதமான என்ஜினீயர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் கட்டிட ஒப்பந்தகாரர் முத்துராமலிங்கம். இவருடைய மகன் என்ஜினீயர் அந்தோணிராசு (வயது 27). இவரும் கட்டிட ஒப்பந்ததாரர். இதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (56), இவருடைய மகள் முத்துகீதா (30). அந்தோணிராசு வீட்டில் விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தையை சேர்ந்த பரமேசுவரி (47) என்பவர் வேலை செய்து வந்தார்.
கோவிந்தம்மாளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்தோணிராசு வீடு கட்டி கொடுத்து வந்த நிலையில், முத்துகீதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ராமநாதபுரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு கோவிந்தம்மாள் கேட்டாராம். இதையடுத்து அந்தோணிராசுடன் கோவிந்தம்மாள், கீதா, பரமேசுவரி ஆகியோர் ஒரு காரில் சென்றனர். உச்சிப்புளியில் இருந்து ராமநாதபுரத்திற்கு வந்த போது வட்டான்வலசை அருகே அம்மாச்சி அம்மன் கோவில் பகுதியில் கார் திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுபாட்டை மீறி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. அதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. அதில் காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி போராடினர்.
இந்த சம்பவம் நடந்த போது, இரவு அந்த பகுதியில் போக்குவரத்து இல்லாத காரணத்தால் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. வெகு நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் நீண்ட போராட்டத்துக்கு பின்பு காரின் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதில் கோவிந்தம்மாள், கீதா, பரமேசுவரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அந்தோணிராசுவை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி என்ஜினீயர் அந்தோணிராசு பரிதாபமாக இறந்தார். இறந்துபோன என்ஜினீயர் அந்தோணிராசுவுக்கும், கனிமொழி என்பருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கனிமொழி கர்ப்பமாக உள்ளார்.