சித்தோடு அருகே மாணவிகள் அரசு விடுதி எதிரே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு, கலெக்டரிடம் மனு
சித்தோடு அருகே மாணவிகள் அரசு விடுதி எதிரே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
நம்பியூர் அருகே உள்ள காராப்பாடி எல்லைக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–
எங்கள் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆழ்துளை கிணறு அமைத்து எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால் நாங்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாரம்பாளையம் பகுதியில் குடிநீர் எடுத்து வருகிறோம். இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
ஈரோடு மாவட்ட கராத்தே அசோசியேசன் கவுரவ தலைவர் யுவராஜா தலைமையில், தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
சேலம், கோவை போன்ற மாவட்டங்களில் உலக தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் உள்ளன. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் உள் விளையாட்டு அரங்கம் இல்லை. இதனால் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு வீரர் –வீராங்கனைகள் பயிற்சி பெற முடியவில்லை. எனவே அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மொடக்குறிச்சி அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் ஊரின் கிழக்கு பகுதியில் பொது சுடுகாடு இருந்தது. மேலும் அந்த இடத்தை நாங்கள் வழித்தடமாகவும் பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் சுடுகாடு பகுதியை சிலர் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றி விட்டனர். எனவே சுடுகாடு ஆக்கிரமிப்பு பகுதியை எங்களுக்கு மீட்டு தரவேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
உரிமையிழப்போர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘சென்னிமலையில் இருந்து எழுமாத்தூர் வரை செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக அய்யப்பன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
சித்தோடு அருகே உள்ள ஓடக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் மாணவிகள் அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் உள்ள மாணவிகள் தினமும் சித்தோடு அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்திற்கு சென்று வருகிறார்கள். இந்த விடுதிக்கு எதிரே டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது.
கோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த கடை அகற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் பள்ளிக்கூட மாணவிகள் மற்றும் பெண்கள் குடிமகன்களால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
ஈரோடு பாரதி பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘நான் 15 ஆண்டுகளாக பாரதி பெருமாள் நகர் பகுதியில் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறேன். எனது விசைத்தறி கூடத்திற்கு அருகே ஒருவர் ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார். தொழில் போட்டி காரணமாக அந்த மில் உரிமையாளர் எனது விசைத்தறி கூடத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 232 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் எந்திரம் மற்றும் மாவு அரைக்கும் எந்திரம் வாங்குதல், தொழில் தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்காக 19 பேருக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 490 பெறுவதற்கான உத்தரவுகளையும், விதவை உதவித்தொகையாக ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவையும் மாவட்ட கலெக்டர் கதிரவன் வழங்கினார்.