ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை: தமிழக அமைச்சரவை முடிவினை கவர்னர் ஏற்பார் - நாராயணசாமி நம்பிக்கை
ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் முடிவினை கவர்னர் ஏற்பார் என்று நம்புவதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையில் கடந்த மாதம் லிட்டர் ரூ.70 ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டீசலும் ரூ.74 ஆக அதிகரித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு வழங்கிய மானியத்தையும் பாரதீய ஜனதா அரசு ரத்துசெய்துவிட்டது.
இதனால் ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து முழுஅடைப்பு போராட்டத்துக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு பொதுமக்களும் தாமாக முன்வந்து ஆதரவு தந்ததால் முழுஅடைப்பு வெற்றிபெற்றுள்ளது.
அரசியல் கட்சிகள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்க முழு உரிமை உண்டு. ஆனால் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது. கோரிக்கையை ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் முடிவு. சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபனையில்லை என்று ராகுல்காந்தியும், பிரியங்காவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சரவையின் முடிவினை ஏற்று அவர்களை விடுவிக்க கவர்னர் உத்தரவு பிறப்பிப்பார் என்று நம்புகிறேன்.
அவர்களது விடுதலையில் எனக்கு தனிப்பட்ட கருத்து உள்ளது. ஆனாலும் ராகுல்காந்தியின் கருத்தை ஏற்பது எனது கடமை. இந்த விஷயத்தில் தமிழக கவர்னர் விரைவில் முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.