கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - மாநில தலைவர்


கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - மாநில தலைவர்
x
தினத்தந்தி 10 Sep 2018 11:11 PM GMT (Updated: 10 Sep 2018 11:11 PM GMT)

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

உதவி பேராசிரியர் மீது மாணவி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக எங்களிடம் புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை ஆகியவை இணைந்து வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் உரிமை தொடர்பான பெண்களுக்கான சட்டங்கள் குறித்து 2 நாள் கருத்தரங்கு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி வரவேற்றார்.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

பெண்கள் சமுதாயத்தை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற்று தருவதே மகளிர் ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது சமுதாயத்தில் ஆண், பெண் என்ற நிலை மாறி 3-வது பாலினமும் உள்ளது. மக்கள் நடுநிலையாக அனைவரையும் பார்க்க வேண்டும்.

இந்த கருத்தரங்கில் பெண்களின் பாதுகாப்பிற்காக உள்ள வரதட்சணை கொடுமை சட்டம், பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் என பல்வேறு சட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும். இதனை நன்கு அறிந்து மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழுவாகும். இந்த ஆணையம் தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த ஆணையத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் உரிமை தொடர்பாகவும், சட்டங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் போன்றவர்களுக்கு சட்டங்கள் மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இதன்மூலம் அவர்கள் களப்பணி மேற்கொண்டு கீழ்த்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

தேசிய மகளிர் ஆணையம் ஆண்டுக்கு 12 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் போதுமானது என்று கூறியுள்ளது. நாங்கள் மாதத்திற்கு 2 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெண்கள் ஆண்களை முந்தி செல்ல வேண்டும் என்று இது போன்று நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சமூகத்தில் கணவரை இழந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் உயர்கல்விக்கு என்ன படிக்கலாம், எந்தமாதிரி வேலைக்கு செல்லலாம் போன்ற ஆலோசனைகளும் மகளிர் ஆணையம் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சமூக நலத்துறை, காவல்துறை, சட்டத்துறை என பல்வேறு துறைகளில் இருந்தும், அமைப்புகளில் இருந்தும் வந்த அதிகாரிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

பின்னர் மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆணையம் தொடங்கப்பட்டு இது வரை பெண்களுக்கு எதிரான 3 ஆயிரம் புகார்கள் வந்து உள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் 863 புகார் வந்துள்ளது. இதில் பெரும்பாலானது குடும்ப வன்முறை தான். எங்களுக்கு போலீசார் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மாணவி உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இது குறித்து மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story