கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
ஸ்ரீமுஷ்ணத்தில் கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 51). இவர் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10–ந்தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் முழுஅடைப்பு காரணமாக மதியம் 3 மணியளவில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் இருந்த ரூ.32 ஆயிரத்து 600–யை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.