நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை - உதவி கலெக்டர் தகவல்


நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை - உதவி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Sep 2018 11:30 PM GMT (Updated: 11 Sep 2018 10:44 PM GMT)

ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுடன் சென்று, நீர்நிலை புறம்போக்குப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறைத்தீர்வு கூட்டத்தில் உதவி கலெக்டர் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் வேலூரில் உதவி கலெக்டர் மேகராஜ் தலைமையில் நடந்தது. அதில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்துப் பேசினார்கள்.

அப்போது சதுப்பேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வேலூர் மாவட்ட வேளாண்மைத்துறைக்கு நிரந்தரமான இணை இயக்குனரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதில் அளித்த உதவி கலெக்டர் மேகராஜ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தற்போது தனிநபர் நிலத்தையும் சமன்படுத்தும் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறு, குறு விவசாயிகளின் நடவு மற்றும் அறுவடை பணியையும் இந்தத் திட்டத்தில் சேர்க்க மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலை உறுதியளிப்புத் திட்டத்தை இந்திய அளவில் தமிழகத்தில் தான் சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறோம். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்காகத் தான் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தில் 3 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. அதில் வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு, குறித்த நேரத்தில் கூலி வழங்குவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இதற்காக விருது கிடைத்துள்ளது.

இந்தத் திட்டத்தில் தேவையான அளவுக்கு நிதி இருக்கிறது. விவசாயிகள் இந்தத் திட்டத்தில் தங்கள் நிலங்களில் பணி செய்ய வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம். அதற்கான பணியை தேர்வு செய்யும்போது, தகுதியான பணியாக இருக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்குப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகளான நீங்கள் சரியான தகவலைக் கொடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் அதை அகற்ற கோர்ட்டில் தடைவாங்கி இருக்கக்கூடாது. அப்போது தான் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற குறைத்தீர்வு கூட்டம் நடந்து முடிந்ததும், விவசாயிகளுடன் சென்று நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Next Story