கழிவறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்


கழிவறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 13 Sept 2018 2:30 AM IST (Updated: 13 Sept 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுவர் அறிவியல் பூங்கா, அதனருகே கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமருவதற்கு இடமும், ஸ்கேட்டிங் மைதானமும் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வருபவர்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், ஸ்கேட்டிங் பயிற்சிக்கு வருபவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே வளாகத்தில் கழிவறை அமைக்கப்பட்டது. அதனை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த கழிவறை பழுதடைந்தும், மேற்கூரையின்றியும், தண்ணீர் வசதியின்றியும், மேலும் கழிவறை கோப்பைகள் சேதமடைந்தும் மோசமான நிலையில் காணப்படுகிறது.இதனால் சிறுவர் பூங்கா, கலெக்டர் அலுவலகம், ஸ்கேட்டிங் பயிற்சிக்கு வருபவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். பழுதடைந்து காணப்படும் கழிவறையில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழுதடைந்து காணப்படும் கழிவறையை கூட இதுவரை சரி செய்ய வராத அதிகாரிகள், தங்களது பகுதியில் உள்ள குறைகளை எப்படி சரி செய்வார்கள் என்று கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு செல்லும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புலம்பியவாறு செல்வதை காண முடிகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழுதடைந்து காணப்படும் கழிவறையை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story