குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2018 4:00 AM IST (Updated: 13 Sept 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பக்தர்கள் கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட்டனர்.

நாகர்கோவில்,

விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள இந்திர விநாயகர், நீலகண்ட விநாயகர், மார்த்தாண்ட விநாயகர், பெண் உருவில் உள்ள விக்னேஸ்வரி சன்னதிகள், நாகராஜா கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி, கன்னியாகுமரி, மண்டைக்காடு கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதிகள், சுசீந்திரம் அற்புத விநாயகர் கோவில், கிருஷ்ணன்கோவில் விநாயகர் கோவில், வடசேரி காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி, நாகர்கோவில் செட்டித்தெரு பிள்ளையார் கோவில், வடிவீஸ்வரம் கன்னி விநாயகர் கோவில், இந்திர விநாயகர் கோவில், சக்தி விநாயகர் கோவில், நாகராஜா கோவில் ரதவீதி விநாயகர் கோவில், மீனாட்சிபுரம் அற்புத விநாயகர் கோவில், வடசேரி கற்பக விநாயகர் கோவில், சற்குணவீதி பிள்ளையார் கோவில் மற்றும் நாகர்கோவில் நகரப்பகுதிகள் முழுவதிலும் உள்ள விநாயகர் கோவில்கள், ஆரல்வாய்மொழி பொய்கை விநாயகர் கோவில், கேரளபுரம் விநாயகர் கோவில், இரவிபுதூர் விநாயகர் கோவில் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

சில கோவில்களில் ஏராளமான பெண்கள் சேர்ந்து கொழுக்கட்டை தயாரித்து வழிபாடு செய்தனர். நாகர்கோவில் நகரின் பல பகுதிகளில் அன்னதானங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான வீடுகளில் பிடி கொழுக்கட்டை, இலை கொழுக்கட்டை பல்வேறு விதமான கொழுக்கட்டைகள் தயாரித்து சாமிக்கு படைத்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, பா.ஜனதா, இந்து மகாசபா, சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா உள்ளிட்ட இந்து இயக்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இதேபோல் இந்த ஆண்டும் பூஜைக்கு வைப்பதற்காக 1½ அடி முதல் 11 அடி உயரம் வரையிலும் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு அந்தந்த இந்து இயக்கங்கள் சார்பில் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதுதவிர வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று காலையில் இருந்து இரவு வரை நாகர்கோவில் மற்றும் குமரி மாவட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே பூஜைக்கு வைக்கப்பட்டன. பூஜைக்கு வைக்கப்பட்ட சிலைகள் 15, 16-ந் தேதிகளில் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, சின்னவிளை கடற்கரை, தேங்காப்பட்டணம் கடற்கரை, மிடாலம் கடற்கரை, வெட்டுமடை கடற்கரை, பள்ளி கொண்டான் அணை, திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பதற்கும், சிலை கரைப்பு ஊர்வலத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குமரி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவரும், கோட்ட செயலாளருமான மிசா சோமன் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 1,426 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தோம். அதன்படி விநாயகர் சிலைகள் நேற்று காலையில் இருந்து ஒவ்வொரு பகுதியாக வைக்கப்பட்டு வருகிறது. இந்து முன்னணி சார்பில் 1½ அடி முதல் 10½ அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை பகுதியில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. வழக்கமாக 10 நாட்கள் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 3 நாட்கள்தான் பூஜைக்கு வைக்கப்படுகின்றன. மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் 15-ந் தேதி சின்னவிளை கடலில் கரைக்கப்படுகிறது. 16-ந் தேதி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

இந்து முன்னணி தவிர இந்து மகாசபா, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து இயக்கங்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தக்கலை பெருமாள் கோவிலில் இந்து சகோதர இயக்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, குழந்தைகள் தினவிழா, பஜனை ஊர்வலம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் நடந்தன. காலையில் கணபதி ஹோமம், பஜனை ஊர்வலம் நடந்தது. தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் அரவிந்தாட்ச நாயர், பொருளாளர் ராஜசேகர், துணை தலைவர் பூதநாத பிள்ளை, இணை செயலாளர் ஹரிகுமார் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்- சிறுமியர்கள் கிருஷ்ணன்- ராதை, சிவன்- பார்வதி, விநாயகர், முருகன், விவேகானந்தர், ராமர் மற்றும் பல தேச தலைவர்கள் வேடமிட்டு பெருமாள் கோவிலிருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் சமய வகுப்பு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, வேப்படி விநாயகர் கோவில், பார்த்த சாரதி கோவில், மேட்டுக்கடை வழியாக கேரளபுரம் அதிசய விநாயகர் கோவில் சென்றடைந்தது. அங்கிருந்து மீண்டும் அரண்மனை சாலை வழியாக பெருமாள் கோவில் வளாகம் வந்தடைந்தது.


Next Story