மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:30 AM IST (Updated: 14 Sept 2018 6:29 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்,

மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து அரண்மனை முன்பு கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

முன்னதாக சட்டமன்ற கங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:– மத்திய பா.ஜ.க. அரசு தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். கருப்பு பண ஒழிப்பு மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் தோல்வியடைந்துள்ளது. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய பிரதமர் மோடியின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் 5 கோடிக்கு மேற்பட்டவர்கள் வேலையிழந்துள்ளனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் குறைந்த விலைக்கு ரபேல் போர் விமானம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த மத்திய பா.ஜ.க. அரசு மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து அதே போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. சமீபத்தில் அதே பிரான்ஸ் நிறுவனம் அரபு நாடுகளுக்கு அதே போர் விமானங்களை ரூ.300 கோடி விலை குறைவாக விற்பனை செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் அம்பானி போன்ற பெரும் தொழில் அதிபர்கள், இடைத்தரகர்கள் லாபமடைந்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

தமிழக அரசு வாங்கியுள்ள ரூ.4 லட்சம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இதனை செலுத்த முடியாத அளவுக்கு நிதி நெருக்கடியில் தமிழக அரசு உள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வரஉள்ளது. நல்ல தீர்ப்பு வந்தால் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு விடும். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்பாபு, விக்டர், வட்டார தலைவர்கள் திருப்புல்லாணி சேதுபாண்டி, மண்டபம் மேகநாதன், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், மாவட்ட துணை தலைவர் முத்துக்கிருஷ்ணன், மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஏ.ஜே.ஆலம், பொதுக்குழு உறுப்பினர் ஆர்ட் கணேசன், செந்தாமரை கண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story