ரபேல் போர் விமான விவகாரம்: ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலம்


ரபேல் போர் விமான விவகாரம்: ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலம்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:30 AM IST (Updated: 14 Sept 2018 7:12 PM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு ஊழல் செய்து இருப்பதாக குற்றம்சாட்டி ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஈரோடு,

இந்திய பாதுகாப்பு துறைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மத்திய பா.ஜனதா அரசு ஊழல் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்த அவர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நேற்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகியவை நடந்தன.

இந்த போராட்டங்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவேரா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொறுப்பாளர்கள் முத்துக்குமார், நல்லசாமி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சம்பத்நகர் 4 ரோடு பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ரபேல் போர் விமானத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டு ஒரு மினி வேனில் கட்டி வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், ரபேல் போர் விமான ஊழலை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். சம்பத்நகரில் தொடங்கிய ஊர்வலம் கொங்கு கலையரங்கம் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறினார் பிரதமர் மோடி. அவர், தன்னை உத்தமர், லஞ்சம் வாங்காதவர், நல்லாட்சி தருவேன் என்றெல்லாம் கூறினார். ஆனால், இங்கே வங்கி கணக்கு வைத்திருக்கும் உங்களுக்கு தெரியும். யாருக்கேனும் ரூ.15 லட்சம் கிடைத்ததா?. கிடையாது. சிறுக சிறுக சேமித்து வங்கியில் வைத்திருந்த பணம்தான் மோடியின் அரசால் பறிபோனது.

மக்களுக்காக சிந்தித்து மக்களுக்காக செயல்பட்டது சோனியாகாந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சி. ஆனால் இப்போதைய மோடியின் ஆட்சி, மோசடி ஆட்சியாக உள்ளது. ஒரு விமானத்தில் ரூ.1500 கோடி லஞ்சம் பெற வழி செய்து இருக்கிறார்கள். இந்திய நாட்டில் இந்திராகாந்தியின் குடும்பம் ஆட்சிக்கு வந்தால்தான் ஏழை மக்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் சென்றபோது ஒரு மாணவி பாசிச பா.ஜனதா அரசு ஒழிக என்று கோ‌ஷமிட்டார் என்பதற்காக அவரை சிறையில் அடைக்க வைத்தார். ஒரு ஏழை மாணவி, தனது திறமையால் படித்து கனடாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருபவர். அவரை சிறையில் அடைக்க முடிந்தது. இதோ இப்போது நான் இங்கே நின்று கொண்டு கூறுகிறேன். பாசிச பா.ஜ.க. ஒழிக என்று நான் கூறுகிறேன். நான் மட்டுமல்ல இங்கே போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் ஆண்–பெண் அனைவரும் கூறுகிறோம். தமிழிசை சவுந்தரராஜனால் கைது செய்ய முடியுமா? (இவ்வாறு கூறிக்கொண்டு 3 முறை பாசிச பா.ஜ.க. ஒழிக என்று கோ‌ஷமிட, அதை கூடி இருந்தவர்கள் திரும்ப கூறினார்கள்).

மத்தியில் மோடி என்றால், தமிழகத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இவர்களின் காலத்தில் ஜெயில்களில் சொகுசு வாழ்க்கை நடத்தும் நிலை இருக்கிறது. விரைவில் ஆட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு செல்ல இருப்பதால் முன்கூட்டியே வசதிகள் செய்து வைத்து இருக்கிறார்கள்.

இவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடலாம் ஆனால் நடைபெற இருக்கின்ற தேர்தலில் மக்களின் வாக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது. பெண்கள் காங்கிரஸ் கட்சியின் அதிக அளவில் உறுப்பினர்களாக வேண்டும். காங்கிரஸ் கட்சியும் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து உள்ளன. மேலும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் சேர இருக்கின்றன. எனவே வெற்றி பெறப்போவதும் ஆட்சி அமைப்பதும் நமது கூட்டணிதான்.

இவ்வாறு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.


Next Story