இலவச சீருடைகள் வழங்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்


இலவச சீருடைகள் வழங்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:00 PM GMT (Updated: 14 Sep 2018 8:19 PM GMT)

இலவச சீருடைகள் வழங்கக்கோரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருபுவனை,

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் தொடங்கி சில நாட்களுக்குள் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பள்ளி தொடங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச சீருடைகள் வழங்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இலவச சீருடைகள் இதுவரை வழங்கப்படாததை கண்டித்தும், உடனடியாக இலவச சீருடை வழங்கக்கோரியும், புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுக் காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாசலில் திரண்டனர். பின்னர் பள்ளியின் நுழைவுவாயில் கதவை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் அவர்களின் பெற்றோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

போராட்டம் பற்றி அறிந்ததும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணபதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்தார். கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி இலவச சீருடை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். மாணவர்களின் பெற்றோரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story