ராமசாமி படையாட்சியாருக்கு வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம்


ராமசாமி படையாட்சியாருக்கு வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:51 PM GMT (Updated: 14 Sep 2018 11:51 PM GMT)

கடலூரில் ரூ.2.15 கோடி செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு வெண்கல சிலையுடனான நினைவு மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கடலூர், 

மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாட்சியார், தென்ஆற்காடு மாவட்டம் எனப்படும் தற்போதைய கடலூரில் 1918-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். அவர் கடலூர் தொகுதியிலிருந்து 1952-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், திண்டிவனம் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் ராமசாமி படையாட்சியார் 1954 முதல் 1957 வரை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அவர் மக்கள்நலப் பணியோடு சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு தொடங்கப்பட்டு வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதவீத இடஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை உழைப்பாளர் கட்சி மாநாட்டில் நிறைவேற்றியவர் ராமசாமி படையாட்சியார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 29.6.2018 அன்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த மரியாதைக்குரிய ராமசாமி படையாட்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், 19.7.2018 அன்று நடந்த சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாட்சியாருக்கு அவர் பிறந்த கடலூரில் முழுஉருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவுமண்டபம் அமைக்கப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, கடலூர் மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாட்சியாருக்கு ரூ.2.15 கோடி மதிப்பீட்டில், 0.69 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள முழுஉருவ வெண்கல சிலையுடன் கூடிய நினைவுமண்டபத்திற்கு காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ள இடமான கடலூர் மஞ்சக்குப்பத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, வீரமணி, கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், எம்.பி.க்கள் ஆர்.கே.பாரதிமோகன், பன்னீர்செல்வம், செஞ்சி சேவல் ஏழுமலை, ராஜேந்திரன், டாக்டர் கே.காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், ஜே.கே.என்.ராமஜெயலிங்கம், வெங்கடாசலம், மனோன்மணி, ராஜா, சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ள இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எஸ்.எஸ்.ராமசாமி குடும்பத்தினர்

கடலூரில் நடந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சொரத்தூர் ஆர்.ராஜேந்திரன், எஸ்.எஸ்.ராசாமி படையாட்சியாரின் இளைய மகன் எஸ்.எஸ்.ஆர்.மந்திரிகுமார், மகள் பானுமதி ராமசாமி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், படையாட்சியார் பேரவை மாநிலத் தலைவர் திருவாரூர் எம்.பி.காந்தி, வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய தலைவர் ராஜன், இணைப்பு செயலாளர் ஆர்.ஏ.ஆர்.கண்ணன், சென்னை வன்னிய கூட்டமைப்பு நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி, கடலூர் சப்-கலெக்டர் சரயூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜா கிருபாகரன், நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் கடலூர் பழனிசாமி, சங்கராபுரம் அரசு, மாவட்ட பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், விவசாய அணி செயலாளர் காசிநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், முன்னாள் நகரசபை கவுன்சிலர்கள் கந்தன், தமிழ்செல்வன், அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் மூத்த மகன் டாக்டர். எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ் நன்றி கூறினார்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழா வரலாற்று சாதனை விழாவாக அமைந்துள்ளது.

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அனைத்து மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர். அவருக்கு நினைவு மண்டபம் மற்றும் முழு உருவ வெண்கல சிலை அமைப்பதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்திருந்தனர். அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தந்துள்ளார். இதற்காக அவருக்கு கடலூர் மாவட்ட மக்கள் சார்பிலும், எங்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story