ராமேசுவரம்–பரமக்குடி இடையே ரெயில்வே ‘கேட்’களை மூடும் போது எச்சரிக்கை மணி
விபத்தை தடுக்கும் பொருட்டு ராமேசுவரம்–பரமக்குடி இடையேயான ரெயில்வே கேட்களில் எச்சரிக்கை மணி அமைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
நாடு முழுவதும் உள்ள ரெயில்வே பாதைகளில் உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. தொடர்ந்து அந்த வழியாக ஏற்படும் விபத்துகளையும், உயரிழப்புகளையும் தடுக்க ரெயில்வே துறை தீவிரம் காட்டும் வகையில், ஆள் இல்லாத ரெயில்வே கேட் பகுதியில் கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்குவதற்கான கட்டிட வசதியையும் செய்து கொடுக்க ரெயில்வே துறை மூலம் உத்தரவிடப்பட்டது.
அதுபோல் மாவட்டத்தில் ராமேசுவரம், மெய்யம்புளி, அரியமான் பகுதி மற்றும் பரமக்குடி வரை 6–க்கும் மேற்பட்ட இடங்களில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்கள் பல வருடங்களாக இருந்து வந்தன. அதிலும் குறிப்பாக அரியமான் கடற்கரை செல்லும் ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்கள் மோதி பல விபத்துகள் நடைபெற்றுள்ளன.
இந்தநிலையில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்கள் அகற்றப்பட்டு 24 மணி நேரமும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம், மெய்யம்புளி, தங்கச்சிமடம், அரியமான் உள்ளிட்ட 6 இடங்களில் கேட் கீப்பர் அறை புதிதாக கட்டி தரப்பட்டது.
அதுபோல் கேட்கீப்பர் அறைக்கு அருகிலேயே ஒலி பெருக்கியுடன் கூடிய எச்சரிக்கை மணியும் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் வரும் சில நிமிடத்திற்கு முன்பு கேட் கீப்பர் அறையில் உள்ள எச்சரிக்கை மணியில் உள்ள பட்டனை ஆன் செய்தவுடன் ரெயில்வே கேட்டின் அருகில் உள்ள ஒலிபெருக்கியில் கேட் மூடப்படுவதற்கான அறிகுறியாக சத்தம் வரும்.
அந்த சமயத்தில் கேட்கீப்பர் கேட்டை அடைத்து விட்டு மீண்டும் எச்சரிக்கை மணியின் பட்டனை ஆப் செய்யும் போது சத்தம் நின்று விடும். ரெயில்வே கேட்டை ரெயில் கடந்து சென்ற பின்பு வழக்கம் போல் கேட்கீப்பர் மூலம் கேட் திறக்கப்படுகிறது. இதன்மூலம் இருசக்கர வாகனம், கார், வேன், பஸ்கள் என பலதரப்பட்ட வாகனங்களின் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் இந்த எச்சரிக்கை மணியை கேட்டதும், கேட் அடைக்கப்பட உள்ளதாக தெரிந்து கொள்வார்கள்.
இது கேட்டை கடக்கும் முன்பு அனைத்து தரப்பினக்கும் எச்சரிக்கை செய்யும் விதத்தில் உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து பரமக்குடி வரை இடைப்பட்ட பகுதியில் 20–க்கும் மேற்பட்ட ரெயில்வே கேட்கள் உள்ளன. அவற்றிலும் ராமேசுவரம்–மதுரை இடையே உள்ள அனைத்து ரெயில்வே கேட்களிலும் இந்த எச்சரிக்கை மணியை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.