உரிய அனுமதியின்றி மணல், கிரானைட் கற்கள் ஏற்றி செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை


உரிய அனுமதியின்றி மணல், கிரானைட் கற்கள் ஏற்றி செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 16 Sept 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

உரிய அனுமதியின்றி மணல், கிரானைட் கற்கள் ஏற்றி செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திற்கு வாகனங்களில் மணல் கொண்டு செல்வதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணிகள் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்துறை, காவல் துறை மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமங்கள் இருப்பு வைத்தல் போக்குவரத்து மற்றும் கனிம முகவர்கள் விதிகள் 2011-ன்படி ஜல்லி, மணல் மற்றும் இதர கனிமங்கள் லாரிகளில் எடுத்து செல்லும் போது பொது மக்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களில் மேற்பகுதிகளில் தார்பாய்கள் கொண்டு மூடி எடுத்து செல்ல அனைத்து குவாரி உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ கனிமங்கள் எடுத்துச் சென்றாலோ தமிழ்நாடு கனிம விதிகளின்படி வாகனம் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய அனுமதியின்றி மணல் மற்றும் கிரானைட் கற்கள் ஏற்றிவரும் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகன உரிமத்தையும் ஓட்டுனர் உரிமத்தையும், ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story