விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன


விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன
x
தினத்தந்தி 15 Sep 2018 11:03 PM GMT (Updated: 15 Sep 2018 11:03 PM GMT)

போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

திருச்சி,

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ந் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 18 அடிவரை வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. திருச்சி மாநகரை பொறுத்தவரை உறையூர், தென்னூர், பீமநகர், கே.கே.நகர், தில்லைநகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 227 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. சிலைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. வீடுகளிலும் அரை அடி முதல் 2 அடி வரையிலான சிறிய விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் 3 நாட்கள் வழிபாட்டுக்கு பின்னர், இந்து முன்னணி, பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் விநாயகர் சிலைகளை நேற்று காவிரி ஆறு மற்றும் நீர்நிலைகளான குளம், ஏரிகளில் வாகனங்கள் மற்றும் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைத்தனர்.

விநாயகர் சிலைகள் திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப் பட்டதையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா ஆகியோர் மேற்பார்வையில் 1,500 போலீசார் திருச்சி காவிரி கரையோரம் மற்றும் ஆற்றுப்பாலம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் காவிரி பாலம் பிரிவு ரோட்டில் தற்காலிகமாக போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவிரி பாலத்தில் போக்குவரத்து மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது.

திருச்சி காவிரி ஆற்றில் நேற்று காலை முதலே வீடுகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீட்டில் இருந்து பெண்கள் எடுத்து வந்தனர். அவர்கள் காவிரி பாலத்தில் நின்றபடியே சிலைகளை ஆற்றில் வீசினர். கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் கரைப்பின்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடியபடியே உள்ளதால், சிலைகளை கரைப்பதில் எவ்வித சிரமமும் இல்லை.

பிற்பகல் 2 மணி முதல் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக காவிரி ஆற்றுப்பாலம் பகுதிக்கு எடுத்து வரப்பட்டன. விநாயகர் சிலைகளை கரைக்க வசதியாக காவிரி ஆற்றின் பாலத்தில் 6 மேடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணிக்கு மேல் ஏராளமான சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. அங்கு காவிரி ஆற்றின் பாலம் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் தள்ளிவிடப்பட்டு கரைக்கப்பட்டன. சிலர் தற்காலிக மேடைகளில் நின்றவாறே விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் வீசினார்கள்.

7 அடி முதல் 18 அடி வரையிலான மிக உயரமான விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் காவிரி ஆற்றில் இறக்கப்பட்டு கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதை பார்ப்பதற்காக, திரளானவர்கள் நேற்று மாலை முதல் காவிரி பாலத்தில் திரண்டனர். இதனால், காவிரி பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டதையொட்டி, மாநகர போலீசாரால் வாகன போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டிருந்தது. விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவையும் தாண்டி விடிய, விடிய நடந்தது. திருச்சி காவிரி ஆற்றில் நேற்று நள்ளிரவு வரை 300-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முசிறி, துறையூர், தா.பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கடந்த 3 நாட்களாக பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டது. நேற்று விநாயகர் சிலைகளை போலீஸ் பாதுகாப்புடன் சரக்கு ஆட்டோக்களில் ஏற்றி முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்தனர். பின்னர் முசிறி கொக்குவெட்டியான் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் சிலைகளை கரைத்தனர். முசிறியிலிருந்து 65 சிலைகளும், தா.பேட்டையில் இருந்து 30 சிலைகளும், ஜெம்புநாதபுரம் பகுதியில் இருந்து 36 சிலைகளும், துறையூர் பகுதியில் 55 சிலைகளும், உப்பிலியபுரத்திலிருந்து 42 சிலைகளும் மற்றும் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளும் நேற்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீத்தாராமன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சமயபுரம் போலீஸ் சரகம் இனாம் சமயபுரம், இந்திரா காலனி, ராசையன் கோவில் தெரு, பள்ளிவிடை உள்ளிட்ட 21 இடங்களில் வைக்கப்பட்ட 23 சிலைகளும், சிறுகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எதுமலை உள்பட 31 இடங்களிலும், மண்ணச்சநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி, வாழ்மால்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பூஜை செய்யப்பட்ட 23 சிலைகளும் அந்தந்த காவல்நிலைய போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் அமிர்த மந்திர கணபதி கோவில் உள்ளது. இங்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 7 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து நாகமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெள்ளைச்சாமி, ஊர் பட்டையதாரர் வெள்ளையன் ஆகியோர் முன்னிலையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மணிகண்டம் புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் கரைக்கப்பட்டது.

இதேபோல் அளுந்தூர், பள்ளப்பட்டி, எரங்குடி, தீரன்மாநகர், கோலார்பட்டி, துரைக்குடி ஆகிய ஊர்களில் உள்ள விநாயகர் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று மாலை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று அளுந்தூர், பள்ளப்பட்டி பகுதி சிலைகளை ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றிலும், மற்ற சிலைகளை அந்தந்த ஊரில் உள்ள நீர்நிலைகளிலும் கரைத்தனர்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் 30 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று சிலைகள் புத்தாநத்தம் காளியம்மன் கோவில் அருகே ஊர்வலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டதும், சிறப்பு வழிபாடுகளுக்குப்பின் ஊர்வலமாக புறப்பட்டது. புத்தாநத்தம் கடைவீதி, இடையபட்டி வழியாக இடையபட்டியில் உள்ள விநாயகர் கோவில் குளத்தை அடைந்ததும் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன. திருச்சி டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல், மணப்பாறை பகுதியிலும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மான்பூண்டி ஆற்றில் கரைக்கப்பட்டன.

Next Story