நெருக்கடியில் இருந்து மீண்ட சிறுநீரக தானம்


நெருக்கடியில் இருந்து மீண்ட சிறுநீரக தானம்
x
தினத்தந்தி 16 Sep 2018 9:18 AM GMT (Updated: 16 Sep 2018 9:18 AM GMT)

மார்ஸ்னைல் சின்கா என்ற பெண் பெங்களூருவில் ஐ.டி. துறையில் வேலை பார்த்தவர். கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிரிழக்கும் அபாய கட்டத்தையும் நெருங்கினார்.அவருக்கு மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது.

பொதுவாக குடும்ப உறுப்பினர்கள் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்குவார்கள். சின்கா விஷயத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவருடைய பெற்றோர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவருடைய சகோதரிக்கு திருமணமாகிவிட்டது. அதனால் மாப்பிள்ளை வீட்டார் சிறுநீரகம் வழங்குவதற்கு அனுமதிக்கவில்லை.

சின்கா, ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள போகாரோ பகுதியை சேர்ந்தவர். அவருடைய மாநிலத்தில் வெளி நபர்களிடம் இருந்து சிறுநீரகம் தானமாக பெறுவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதனால் சமூக வலைத்தளங்கள் மூலமாக உதவி கோரினார். ஆனால் அவருக்கு சாதகமான சூழல் உருவாகவில்லை. உடல்நிலை மோசமடைய தொடங்கியதால் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார். எனினும் அவருக்கு வேலை கொடுத்த நிறுவனம் அவரை வீட்டில் இருந்தே பணி செய்வதற்கு அனுமதி வழங்கியது.

சின்காவுடன் பணியாற்றிய மூத்தபெண் அதிகாரி திதி லகிரி, அவருடைய உடல் நிலை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தார். பின்பு அவரே தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை சின்காவுக்கு வழங்க முடிவு செய்தார். அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர். அவர் சட்டப்படியும், தனது டாக்டர்களின் ஆலோசனைபடியும் தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிவிட்டார். அவருடைய இந்த முடிவுக்கு ஆரம்பத்தில் அவருடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

‘‘சின்காவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்டதும் என்னுடைய சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவு செய்துவிட்டேன். ஏற்கனவே எனது அம்மா அவருடைய ஒரு சிறுநீரகத்தை ஒருவருக்கு தானமாக வழங்கி இருக்கிறார். அவர் இன்றுவரை ஆரோக்கி யமாகத்தான் இருக்கிறார். அதனால் எனக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை. ஆனாலும் என்னுடைய முடிவை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. பின்னர் மனிதாபிமான அடிப்படையில் என் முடிவை ஆதரித்தார்கள்’’ என்கிறார், லகிரி.

இருவரும் ஆவணங்களை சமர்ப்பித்து சட்ட அனுமதி பெற 9 மாதங்கள் ஆகி இருக்கிறது. சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் சின்காவுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப் பட்டிருக்கிறது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். 

Next Story