காற்றடிக்கும் கருவியில் மறைத்து ரூ.40 லட்சம் தங்கம் கடத்தல் சென்னை வாலிபர் கைது


காற்றடிக்கும் கருவியில் மறைத்து ரூ.40 லட்சம் தங்கம் கடத்தல் சென்னை வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2018 4:45 AM IST (Updated: 17 Sept 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

பக்ரைனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வாகனங்களின் டயர்களுக்கு காற்றடிக்கும் கருவியில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை வாலிபரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பக்ரைனுக்கு சுற்றுலா விசாவில் சென்று விட்டு திரும்பி வந்த சென்னையைச் சேர்ந்த ஜாகீர் உசேன்(வயது 28) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் பலூன் மற்றும் சைக்கிள், கார், மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களின் டயர்களுக்கு காற்றடிக்க பயன்படுத்தப்படும் பைப் சிலிண்டர் கருவி இருந்தது. அதன் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை பிரித்து பார்த்தனர்.

அதில், கருவியின் உள்புறம் தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இது தொடர்பாக ஜாகீர் உசேனை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் அந்த தங்கத்தை யாருக்காக பக்ரைனில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?, இந்த தங்கம் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story