பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது; 40 பவுன் நகை மீட்பு
பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 46 பவுன் நகைகளையும் மீட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி பூக்கடை வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 64). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை வீட்டில் உள்ள மேஜையின் மீது வைத்து விட்டு குளியல் அறையில் குளிக்க சென்றார். குளித்து விட்டு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பதற்றம் அடைந்து மேஜையை பார்த்தார். அப்போது அதன் மீது வைக்கப்பட்டிருந்த நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்த நகையை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பவானி புதிய பஸ் நிலையம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் சுற்றிக்கொண்டிருப்பதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த நபர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றார். உடனே அவரை போலீசார் துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர் சேலம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சின்னையன் (55). இவர்தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் வீட்டின் பூட்டை உடைத்து மேஜை மீது இருந்த 6 பவுன் நகையை திருடி சென்றது,’ தெரியவந்தது. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், ‘சித்தோட்டில் 5 வீடுகள், பவானி, அம்மாபேட்டையில் தலா 1 வீடு என மொத்தம் 7 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதையும்,’ கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து சின்னையனை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 46 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.