வால்பாறை அருகே வீடு, கடைகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்


வால்பாறை அருகே வீடு, கடைகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 17 Sept 2018 3:15 AM IST (Updated: 17 Sept 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே வீடு, கடைகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் பன்னிமேடு, சிங்கோனா ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் உள்ள மளிகை கடை, வீடு, வாகமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடை ஆகியவற்றை இடித்து சேதப்படுத்தின.

வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டு மீண்டும் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் குடியிருப்புக்குள் மீண்டும் புகுந்து விடுகின்றன. யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறையை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அப்போது அந்த வழியாக 6 யானைகள் கூட்டமாக வந்தது. இதையடுத்து பஸ்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். பின்னர் யானைகள் சாலையை கடந்து பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கும் தோணிமுடி எஸ்டேட் பகுதிக்கும் இடைப்பட்ட வனச்சோலைக்கு சென்றது.

அந்த யானைகள் கூட்டமாக எஸ்டேட் குடியிருப்பு பகுதி அருகிலேயே முகாமிட்டு உள்ளது. எனவே மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story