காவலர் பணிக்கான வயது 24 ஆக உயர்வு: பல் மருத்துவக்கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கவர்னர் ஒப்புதல்
புதுவை காவலர் பணியில் சேருவதற்கான வயது வரம்பினை 24 ஆக உயர்த்துவதற்கும், அரசு பல் மருத்துவக்கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை காவல்துறையில் 390 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியில் சேருவதற்கான வயது உச்சவரம்பு 22 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
காவலர் பணியிடங்களுக்கான ஆட்கள் சேர்க்கை நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த வயதுவரம்பினை 24 ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து வயது வரம்பினை 24 ஆக உயர்த்த அரசு முடிவு செய்து அதற்கான கோப்பினை கவர்னருக்கு அனுப்பிவைத்தது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தாவுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து காவலர் பணியில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பினை 24 ஆக உயர்த்தும் கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் ஜூலை மாதம் முதல் 6 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு நிர்வாக ரீதியில் ஒப்புதலும் வழங்கியுள்ளார். பத்ம விருதுக்கு மாநில உயர்மட்ட குழு சிபாரிசு செய்த பெயர்களுக்கும், மகாத்மா காந்தி பல் மருத்துவக்கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற செலவுகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ரூ.5.5 கோடி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
பல் மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் சம்பளம் வழங்கக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அங்கு கவர்னர் கிரண்பெடி ஆய்விலும் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து சம்பளம் வழங்க நிதிஒதுக்கிட கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.