ஒரே நாளில் 8 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை


ஒரே நாளில் 8 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 16 Sep 2018 9:30 PM GMT (Updated: 16 Sep 2018 10:41 PM GMT)

கடலூர் எஸ்.என்.சாவடியில் ஒரே நாள் இரவில் 8 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கடலூர், 


கடலூர் எஸ்.என்.சாவடியில் உள்ள நாடார் தெருவை சேர்ந்தவர் மோகன். இவர் அங்கு சிமெண்ட் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் முடிந்து பூட்டி சென்றார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து, அதில் இருந்த ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல், மோகனின் கடைக்கு அருகில் உள்ள வரக்கால்பட்டு கிராமத்தை சேர்ந்த லதா(36) என்பவருக்கு சொந்தமான ரத்தபரிசோதனை நிலையத்தில் ரூ.6 ஆயிரத்து 300, சுந்தரவாண்டியை சேர்ந்த கார்த்திகேயனுக்கு(35) சொந்தமான அரிசிக்கடையில் ரூ.5 ஆயிரம், சாவடி முத்துசாமிநகரை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான மாட்டு தீவன கடையில் ரூ.700, யோகமங்களம்(38) என்பவரது மாவுமில்லில் ரூ.1,200, சாவடி ஓம்சக்தி நகரை சேர்ந்த ராமானுஜம்(45) என்பவருக்கு சொந்தமான முட்டை கடை, காவேரிநகரை சேர்ந்த தையல்நாயகி(46) என்பவருக்கு சொந்தமான கவரிங் நகைக்கடை ஆகிய கடைகளில் பூட்டை உடைத்து தலா ரூ.6 ஆயிரம், பிரபாகரனின் மருந்து கடையில் ரூ.1500 என 8 கடைகளில் மொத்தம் ரூ.38 ஆயிரத்து 700-ஐ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள் ளனர். திலகர் என்பவருக்கு சொந்தமான ஜெராக்ஸ் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு கொள்ளை நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளிச்செம்மண்டலம், சூரியாநகரில் ஒரு வீட்டு வளாகத்துக்குள் புகுந்த ஒரு வாலிபரை அந்த பகுதிமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 3 பேர் சேர்ந்து வீடு மற்றும் கடைகளில் கொள்ளையடிக்க நோட்டம் பார்க்க வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னரே இவருக்கும் கடைகளில் நடந்த கொள்ளைக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கடலூர் சாவடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story